திண்டுக்கல்லில் ஓடும் பள்ளி பஸ்சில் திடீரென கிளம்பிய புகை; மாணவ-மாணவிகள் அலறல்

திண்டுக்கல்லில், ஓடும் பள்ளி பஸ்சில் திடீரென புகை கிளம்பியதால் மாணவ-மாணவிகள் அலறி கூச்சல் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-20 21:00 GMT

திண்டுக்கல்லில், ஓடும் பள்ளி பஸ்சில் திடீரென புகை கிளம்பியதால் மாணவ-மாணவிகள் அலறி கூச்சல் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஓடும் பஸ்சில் கிளம்பிய புகை

திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் திண்டுக்கல் நகர், தோமையார்புரம், பேகம்பூர், பூச்சிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக, பள்ளி நிர்வாகம் சார்பில் பஸ், வேன்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி நேற்று காலையில் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான ஒரு பஸ், திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 20 மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

திண்டுக்கல்-மதுரை சாலையில், தோமையார்புரம் அருகே பஸ் வந்தது. அப்போது திடீரென பஸ்சின் பின்பக்க சக்கரத்தின் அருகில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதனை பக்கவாட்டு கண்ணாடி மூலம் கவனித்த டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாலையோரத்தில் பஸ்சை நிறுத்தினார்.

மாணவ-மாணவிகள் அலறல்

இதற்கிடையே பஸ்சில் இருந்து புகை வந்ததைபார்த்த மாணவ-மாணவிகள் அலறி கூச்சல் போட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய டிரைவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாணவ-மாணவிகளை பஸ்சை விட்டு கீழே இறக்கி விட்டார்.

பின்னர் பஸ்சில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் புகையை கட்டுப்படுத்தி பஸ்சில் தீப்பற்றாமல் டிரைவர் தடுத்தார். மேலும் பஸ்சில் உள்ள பேட்டரியின் இணைப்பையும் துண்டித்தார். இதனால் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. அதில் பயணம் செய்த மாணவர்களும் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் மாற்று வாகனம் மூலம் மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

காரணம் என்ன?

தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து கடந்த மாதம் தான் கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார். இந்த நிலையில் தனியார் பஸ்சில் புகை கிளம்பிய சம்பவம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷிடம் கேட்ட போது, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளி வாகனங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி பஸ்சில் புகை கிளம்பியது குறித்து ஆய்வு செய்த போது பின்பக்க சக்கரத்தின் பிரேக் கருவியில் திடீரென பழுது ஏற்பட்டதால் புகை கிளம்பியுள்ளது. டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி தீயணைப்பு கருவியை பயன்படுத்தி புகையை கட்டுப்படுத்தியதால் தீ விபத்து ஏற்படவில்லை. எனவே இது எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு விபத்து தான் என்றார். தனியார் பள்ளி பஸ்சில் திடீரென புகை கிளம்பிய சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்