அடையாறு கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் இறையன்பு ஆய்வு

சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை சார்பில் அடையாறு கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் இறையன்பு ஆய்வு செய்தார். பூங்காவில் உள்ள நடைபாதைகளை நன்றாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Update: 2023-06-11 23:24 GMT

சென்னை,

சென்னை கோட்டூர்புரம் காந்தி நகரில் அடையாறு ஆற்றங்கரையோரம் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் விளையாட்டுத்திடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகளை தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு நேற்று ஆய்வு செய்தார்.

காந்தி நகர் பூங்காவில் ரூ.9.41 கோடியில் சுற்றுச்சுவர் அமைத்தல், சேதமடைந்த சுற்றுச்சுவரை புனரமைத்தல், செடிகளுடன் கூடிய நடைபாதை அமைத்தல், குடிநீர் வசதி மற்றும் மின் வசதி, பசுமையுடன் புல்வெளிகள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், அறிவிப்பு பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், வேலி அமைத்தல் போன்ற பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பூங்காவில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி நல்ல முறையில் உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்த இறையன்பு, பூங்காவில் உள்ள நடைபாதைகளை நல்ல முறையில் பராமரிக்கவும், கூடுதலாக கழிப்பறைகள் கட்டவும், உடற்பயிற்சிகூடம் அமைக்கவும், புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மரக்கன்று

இதையடுத்து கனால் பேங்க் சாலை பாட்ரிசியன் கல்லூரி அருகில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் ரூ.1.99 கோடியில் 499 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் அடர்வனத்துடன் கூடிய கால்பந்து விளையாட்டு மைதானத்தில் 1,402 மரக்கன்றுகள் நடும் பணிகளை இறையன்பு ஆய்வு செய்தார்.

பின்னர், அடையாறு ஆற்றங்கரையோரங்களில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் ரூ.5.40 கோடியில் திரு.வி.க. பாலம் முதல் எம்.ஆர்.டி.எஸ். பாலம் வரை 2.4 கி.மீ. நீளத்துக்கு நடப்பட்டுள்ள 35 ஆயிரத்து 785 மரக்கன்றுகள் மற்றும் எம்.ஆர்.டி. எஸ். முதல் கோட்டூர்புரம் பாலம் வரை ரூ.5.80 கோடியில் 2.2 கி.மீ. நீளத்துக்கு நடப்பட்டுள்ள 23 ஆயிரத்து 39 மரக்கன்றுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இதுநாள்வரை கூவம் மற்றும் அடையாறு ஆற்றங்கரையோரங்களில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 460 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, கோட்டூர்புரம் சித்ரா நகரில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளின் கட்டிட கழிவுகளை உடனடியாக அகற்றவும், ஆற்றங்கரைகளின் ஓரங்களை சமப்படுத்தி, பலப்படுத்தவும் அதிகாரிகளுக்கு, இறையன்பு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை கமிஷனர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், துணை கமிஷனர்கள் ஷரண்யா அறி (கல்வி), எம்.பி.அமித் (தெற்கு வட்டாரம்), கவுன்சிலர்கள், தலைமைப்பொறியாளர்கள் எஸ்.ராஜேந்திரன், புவனேஷ்வரன் (பூங்கா) உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்