உளுந்தூர்பேட்டையில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவரின் கால் முறிந்தது

உளுந்தூர்பேட்டையில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவரின் இடதுகால் முறிந்து போனது.

Update: 2023-10-25 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

9-ம் வகுப்பு மாணவன்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆரியநத்தம் கிராமத்தை சேர்ந்த மாணவன் ஆகாஷ் (வயது 14). உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த ஆகாஷ் மாலை பள்ளி நேரம் முடிந்ததும் சொந்த ஊர் செல்வதற்காக கடைவீதி வழியாக உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றான். அப்போது ஆரியநத்தம் வழியாக சேந்தநாடு நோக்கி செல்லும் அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு அவ்வழியாக வந்தது.

பஸ்சில் ஏற முயன்றபோது...

இதைபார்த்த ஆகாஷ் ஓடிச் சென்று அந்த பஸ்சின் முன்பக்க படியில் ஏறினான். அப்போது அவன் நிலை தடுமாறி பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டான். கண் இமைக்கும் நேரத்தில் ஆகாசின் இடதுகால் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி முறிந்து போனது. வலியால் அலறித்துடித்த மாணவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஆகாஷ் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு ஆகாசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அரசு பஸ்சில் ஏற முயன்ற மாணவன் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழும் சி.சி.டி.வி. காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்