அரசு பஸ் படிக்கட்டில் பயணித்த மாணவன் பலி

அரசு டவுன் பஸ்சின் படிக்கட்டில் பயணித்த 9-ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி பலியானான்.

Update: 2022-08-29 20:36 GMT

மதுரை,

மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள். இதில் மூத்த மகன் பிரபாகரன் (வயது 14), ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 2-வது மகன் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று காலை பிரபாகரன் பள்ளிக்கூடம் செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினான். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உள்ளே செல்ல முடியாமல் பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் பயணித்தபடி சென்றுள்ளான். அந்த பஸ் டி.டி.ரோடு வழியாக ஆரப்பாளையம் நோக்கி சென்றது.

தவறி விழுந்து பலி

மாணவன் பிரபாகரன் திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தான். கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கியதால் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பஸ் நிறுத்தப்பட்டது.

உயிருக்கு போராடிய அவனை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரபாகரன் பரிதாபமாக இறந்தான்.

Tags:    

மேலும் செய்திகள்