அவள் அப்படி செய்து இருக்க மாட்டாள்: மரண படுக்கையிலும் காதலியை காட்டிக்கொடுக்காத மாணவர்; போலீஸ் அதிகாரி வெளியிட்ட உருக்கமான தகவல்

அபரிமிதமான நம்பிக்கையால் மரண படுக்கையிலும் காதலியை காட்டிக் கொடுக்காத மாணவர் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-31 20:11 GMT

அபரிமிதமான நம்பிக்கையால் மரண படுக்கையிலும் காதலியை காட்டிக் கொடுக்காத மாணவர் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

போலீஸ் அதிகாரி பேட்டி

ஷாரோன்ராஜை அவரது காதலியே தீர்த்துக் கட்டியது குறித்து கூடுதல் டி.ஜி.பி அஜித்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராணுவ வீரருடன் திருமண நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து காதலன் ஷாரோன்ராஜிடம் பழகுவதை தவிர்க்க கிரீஷ்மா முடிவு செய்துள்ளார். ஆனால் ஷாரோன்ராஜியால் கிரீஷ்மாவை மறக்க முடியவில்லை. இந்தநிலையில் தனது ஜாதகப்படி முதல் கணவர் இறந்து விடுவார் என்ற தகவலையும் காதலனிடம், கிரீஷ்மா சொல்லி இருக்கிறார். காதலனை ஏமாற்றுவதற்காக இந்த நாடகத்தை அவர் அரங்கேற்றியுள்ளார்.

இந்த மூடநம்பிக்கையை நம்பாதே என ஷாரோன்ராஜ் கூறியுள்ளார். காதலனை கழட்டி விட அவர் ஆடிய நாடகம் பலிக்கவில்லை. இதனால் ராணுவ வீரருடான திருமணத்திற்கு பிறகு காதலனால் தன்னுடைய வாழ்க்கை பாதிக்க நேரிடலாம் என கருதி அவரை வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார்.

காதலி கொன்றது எப்படி?

அதாவது கிரீஷ்மா தான் வழக்கமாக குடிக்கும் கசாயத்தை உடலுக்கு நல்லது என்று கூறி ஷாரோன்ராஜிக்கு கொடுத்து உள்ளார். மேலும், மிகவும் கசப்பாக இருக்கும், ஆதலால் உன்னால் குடிக்க முடியாது என்று காதலனிடம் சவால் விட்டுள்ளார். அந்த கசாயத்தில் தான் விஷம் கலக்கப்பட்டிருந்தது.

ஆனால் காதலியின் சவாலை ஏற்றுக்கொண்ட ஷாரோன்ராஜ் விஷம் கலந்த கசாயத்தை மடக், மடக் என குடித்து உள்ளார். அப்போது கசாயம் கசக்கிறது என்று கூறியதும் கிரீஷ்மா காதலனுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். இதனை அறியாமல் அவர் அங்கிருந்து புறப்பட்டார். காபிக் என்ற பூச்சி மருந்து கலக்கப்பட்ட கசாயத்தை குடித்த சில மணி நேரத்தில் வாந்தி எடுத்த நிலையில் ஷாரோன்ராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விஷம் கொஞ்சம், கொஞ்சமாக வேலையை காட்ட தொடங்கி உடல் உறுப்புகள் செயலிழந்து ஷாரோன்ராஜ் இறந்து விட்டார்.

காதலியை காட்டிக் கொடுக்காத...

மரண படுக்கையில் கூட காதலி தனக்கு துரோகம் இழைத்திருக்க மாட்டாள் என்று அபரிமிதமாக நம்பிய ஷாரோன்ராஜ், கடைசி வரை கிரீஷ்மா குளிர்பானம் தான் கொடுத்தார் என அனைவரிடமும் கூறியுள்ளார். காதலியை நம்பிய அவர் உயிரையும் இழந்து விட்டார். ஷாரோன்ராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த போது உன்னுடைய காதலி தான் குளிர்பானத்தில் ஏதோ கலந்து கொடுத்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் அவள் அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை என ஷாரோன்ராஜ் சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்