கொடைரோடு அருகே சால்வை துணி கழுத்தை இறுக்கி மாணவி பலி

கொடைரோடு அருகே சால்வை துணி கழுத்தை இறுக்கியதில் பள்ளி மாணவி பலியானாள்.

Update: 2022-12-13 16:59 GMT

கொடைரோடு அருகே சால்வை துணி கழுத்தை இறுக்கியதில் பள்ளி மாணவி பலியானாள்.

பள்ளி மாணவி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள மெட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு யுகந்திகா (வயது 7) என்ற மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர். யுகந்திகா, மெட்டூரில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்தநிலையில் நேற்று இரவு வீட்டின் படுக்கை அறையில் யுகந்திகா விளையாடி கொண்டிருந்தாள். அப்போது கையில் சால்வை துணியை வைத்தபடி சுற்றிக்கொண்டிருந்தாள். ஒருகட்டத்தில் அந்த அறையின் ஜன்னல் கம்பியில் சால்வை துணியை கட்டி, தனது கழுத்தில் கோர்த்துக்கொண்டு விளையாடினாள். இதில் எதிர்பாராதவிதமாக சால்வை துணி, யுகந்திகாவின் கழுத்தை இறுக்கியது. இதனால் அவள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாள்.

விசாரணை

இதனை பார்த்த பெற்றோர், உடனடியாக தங்களது மகளை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு யுகந்திகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுமியின் தாய் வசந்தி கொடுத்த புகாரின்பேரில் அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சால்வை துணியை வைத்து சுற்றிய பள்ளி மாணவியின் விளையாட்டு விபரீதமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்