கல்லூரியில் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

நாகர்கோவிலில் தனியார் கல்லூரி முதல் மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-15 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் தனியார் கல்லூரி முதல் மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவி

நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியை சேர்ந்த 20 வயது மாணவி, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் நேற்றுமுன்தினம் சுதந்திர தினவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடந்தது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்போது ஒத்திகை நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த மாணவியை, மற்ற மாணவிகள் கிண்டல் செய்ததாகவும், இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி

அதைத்தொடர்ந்து மாணவி கல்லூரி வளாகத்தில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் அழுதபடி படிக்கட்டில் ஏறினார். திடீரென்று அவர் முதல் மாடியில் உள்ள தடுப்புச்சுவர் மீது ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை கண்ட கல்லூரி மாணவ-மாணவிகள் சத்தமிட்டபடி ஓடி வந்தனர். கீழே விழுந்த மாணவிக்கு கால் முறிந்தது. மேலும் உடலில் ஆங்காங்கே காயங்களும் ஏற்பட்டன. படுகாயம் அடைந்த மாணவியை கல்லூரி நிர்வாகிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டா்கள் மாணவிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவ-மாணவிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்