திருமங்கலத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய மாணவர்தவறி விழுந்து சாவு

திருமங்கலத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது தண்டவாளத்தில் தவறி விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2023-01-25 20:39 GMT

திருமங்கலம்

திருமங்கலத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது தண்டவாளத்தில் தவறி விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.

கல்லூரி மாணவர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பன்னீர்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி பிச்சையம்மாள். இவர்களுடைய 3-வது மகன் சண்முகப்பிரியன் (வயது 19). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் பிரிவு 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக நேற்று சொந்த ஊருக்கு வருவதற்காக நாகர்கோவிலில் இருந்து ரெயிலில் புறப்பட்டார். இதையொட்டி திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயிலில் அவர் பயணித்தார்.

திருமங்கலம் ெரயில் நிலையத்தின் அருகே ெரயில்வே தண்டவாள பணிகள் நடைபெற்று வருவதால் முதலாவது நடைமேடை பகுதியில் வரக்கூடிய எக்ஸ்பிரஸ் ெரயில்கள் அனைத்தும் திருமங்கலம் ெரயில் நிலையத்தில் குறைந்த வேகத்தில் செல்லும். மேலும் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் பெரும்பாலும் திருமங்கலத்தில் நிற்காது. இதனால் திருமங்கலத்தை சேர்ந்தவர்கள் பயணித்தால் மதுரை ெரயில் நிலையம் சென்று அங்கிருந்து மீண்டும் பஸ் மூலமாக திருமங்கலம் வர வேண்டும். இதன்காரணமாக எக்ஸ்பிரஸ் ெரயில் மெதுவாக செல்லும்போது பலரும் அவ்வப்போது ஓடும் ெரயிலில் இருந்து இறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தவறி விழுந்தார்

இதே போல் சண்முகப்பிரியனும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் குறைந்த வேகத்தில் திருமங்கலம் ரெயில் நிலையம் பகுதியில் சென்றதால் அவர் ரெயிலில் இருந்து இறங்கி விடலாம் என நினைத்தார். அவர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய போது எதிர்பாராதவிதமாக கால் தவறி நடைமேடைக்கும், ெரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளி வழியாக தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.

இதில் ரெயில் சக்கரம் ஏறிய இறங்கியதில் சண்முகப்பிரியன் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பயணிகள் இதுகுறித்து திருமங்கலம் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

2-வது சம்பவம்

அதன்பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையிலான ெரயில்வே போலீசார் அங்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே போல் பாதிரியார் ஒருவர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயிலில் இருந்து இறங்க முயன்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் உயிரிழந்த அதே இடத்தில் நேற்று கல்லூரி மாணவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்