துறைமுக தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

துறைமுக தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-17 18:45 GMT

துறைமுக தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

தொழிற்சங்க கூட்டம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக விருந்தினர் மாளிகையில் எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ் (தொழிலாளர்கள் சங்கம்) ஆகிய 5 துறைமுக தொழிற்சங்கங்களின் சம்மேளன கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அகில இந்திய துறைமுக தொழிற்சங்க சம்மேளன தலைவர் முகமது அனீப் தலைமை தாங்கினார். தொடர்ந்து துறைமுக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் துறைமுக தொழிற்சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.

கூட்டத்தில் எச்.எம்.எஸ். பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளிங்டன் பர்னாந்து, ஐ.என்.டி.யு.சி. துணைத்தலைவர்கள் கதிர்வேல், பலராமன், வ.உ.சி. துறைமுக செயலாளர் ராஜகோபாலன், எச்.எம்.எஸ். (தொழிலாளர்கள்) உதவி தலைவர் ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. மாநில தலைவர் நந்தகுமார், செயலாளர் ரசல், ஏ.ஐடி.யு.சி. தலைவர் சரவணன், பிரகாஷ்ராவ், பாலசிங்கம், துறைமுக ஆணைய உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், துறைமுகம் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அகில இந்திய துறைமுக தொழிற்சங்க சம்மேளன தலைவர் முகமது அனீப் நிருபர்களிடம் கூறியதாவது:-

போனஸ் ஒப்பந்தம்

நாடு முழுவதும் உள்ள 11 பெருந்துறைமுகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். (தொழிலாளர்கள் சங்கம்) ஆகிய 5 துறைமுக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் சார்பில் வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் பெருந்துறைமுகங்களில் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு, துறைமுக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு 2021 முதல் 2026-ம் ஆண்டு வரை துறைமுக தொழிலாளர்களுக்கு உற்பத்தி சார்ந்த போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அனைத்து துறைமுக அதிகாரிகள் ஏற்கனவே கையெத்திட்டு உள்ளனர். துறைமுக தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று (அதாவது நேற்று) கையெழுத்திட்டு உள்ளோம். அதேபோன்று ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி டெல்லியில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தள்ளிவைப்பு

இதனால் தொழிற்சங்கங்கள் சார்பில் ஏற்கனவே வருகிற 26-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த வேலைநிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. நவம்பர் மாதம் 6-ந் தேதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லையெனில் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்