முள்வேலியில் சிக்கி பரிதவித்த தெருநாய்; தீயணைப்பு படையினர் மீட்டனர்

வேடசந்தூர் அருகே முள்வேலியில் சிக்கி பரிதவித்த தெருநாயை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

Update: 2023-04-01 20:45 GMT

வேடசந்தூர் அருகே முள்வேலியில் சிக்கி பரிதவித்த தெருநாயை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

முள்வேலியில் சிக்கிய நாய்

வேடசந்தூர் அருகே உள்ள விருதலைப்பட்டி ஊராட்சி சாளரப்பட்டியில், தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதில் ஒரு நாய், சமீபத்தில் 4 குட்டிகளை ஈன்றது. தனது குட்டிகளுடன், அந்த நாய் தெருவில் வலம் வந்தது.

அப்போது சாளரப்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் போடப்பட்டிருந்த இரும்பு கம்பியால் ஆன முள்வேலியை குட்டிகளுடன் தாய் நாய் கடக்க முயன்றது. சிறிய அளவிலான இடைவெளி இருந்ததால், முள்வேலி வழியாக ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்கு குட்டிகள் சென்று விட்டன.

ஆனால் தாய் நாயால் அந்த முள்வேலியை கடக்க முடியவில்லை. அதன் உடல் பகுதி முள்வேலியில் சிக்கி கொண்டது. ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்கு செல்ல முடியாமல் பரிதவித்தது.

ஆக்ரோஷமாக குரைப்பு

அங்கும், இங்குமாக நாய் திமிறியதால் நாயின் வயிறு, முதுகு பகுதியில் முற்கள் குத்தின. ஒரு கட்டத்தில் வேதனையில் நாய் கத்தியது. தாய் நாய் கத்துவதை கண்ட குட்டிகளும் கத்தி கொண்டே இருந்தன. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ராஜேஸ்வரி, முள்வேலியில் சிக்கிய நாயை மீட்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.

எனவே இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர்.

தீயணைப்பு படை வீரர்களை கண்ட நாய் மிரண்டு போய் விட்டது. தனது குட்டிகளை பிடித்து சென்று விடுவார்களோ என்று கருதி அவர்களை பார்த்து ஆக்ரோஷமாக குரைத்தது. இதனால் அதன் அருகே செல்ல தீயணைப்பு படைவீரர்கள் முதலில் தயக்கம் காட்டினர். சிறிதுநேரம் அங்கேயே அவர்கள் காத்திருந்தனர்.

குட்டிகளுடன் ஓட்டம்

இந்தநிலையில் சுமார் ½ மணிநேரத்துக்கு பிறகு நாயின் ஆக்ரோஷம் குறைந்தது. அந்த சமயத்தில் சாதுரியமாக செயல்பட்டு, நாயை பிடிக்க தீயணைப்பு படையினர் முடிவு செய்தனர்.

தீயணைப்பு படை வீரர் ஒருவர், கொஞ்சம் கொஞ்சமாக நாயின் அருகே சென்றார். பின்னர் அவர், நாயின் தலையை தடவி விட்டார். இதனால் நாய் அமைதி காத்தது.

தன்னை காப்பாற்ற அவர்கள் வந்திருப்பதை அறிந்ததை போல தீயணைப்பு படையினரை பார்த்து குரைப்பதை நிறுத்தி விட்டது. அதன்பிறகு முள்வேலியில் சிக்கிய நாயை தீயணைப்பு படையினர் லாவகமாக மீட்டனர். மீட்கப்பட்ட அந்த நாய், தப்பித்தோம் பிழைத்தோம் என்று தனது குட்டிகளுடன் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்