பள்ளத்தில் இறந்து கிடந்த புள்ளி மான்
ஏலகிரி மலையில் புள்ளி மான் ஒன்று பள்ளத்தில் இறந்து கிடந்தது.
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. மலைக்குசெல்லும் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் தண்ணீர் தேடி குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி வருகின்றன. இந்தநிலையில் நேற்று 14 வது கொண்டை ஊசி வளைவில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் ரத்த காயங்களுடன் புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார், கால்நடை மருத்துவர் விஸ்வநாதன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு இறந்து கிடந்த புள்ளி மானை கால் நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து அதே இடத்தில் குழி தோண்டி புள்ளி மான் உடலை புதைத்தனர். புள்ளி மான் வாகனத்தில் அடிப்பட்டு பள்ளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.