தறிகெட்டு ஓடிய கார் வீட்டுக்குள் புகுந்தது

புவனகிரி அருகே நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் வீட்டுக்குள் புகுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்;

Update: 2023-04-28 18:45 GMT

புவனகிரி

சொகுசு கார்

வடலூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் சொகுசு கார் ஒன்று சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் வந்தபோது எதிரே வாகனம் வந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. இதில் கண் ணிமைக்கும் நேரத்தில் அந்த கார், சாலையோரம் இருந்த வெங்கடேசன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து நின்றது.

கார் மோதிய வேகத்தில் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. மேலும், மேற்கூரை பெயர்ந்து ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசனின் தாய் அமாவாசை(வயது 50), மனைவி தில்லைக் கலையரசி(24), அக்காள் மகள் பிரவீனா(18) ஆகியோர் மீது விழுந்து வலி தாங்க முடியாமல் அவர்கள் கூச்சலிட்டனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த சத்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசன் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

காருக்குள் இருந்தவர்களும் லேசான காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் பெயர் விவரம் எதுவும் தொியவில்லை.

போலீசார் விசாரணை

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விபத்துக்குள்ளான காரையும் அப்புறப்படுத்தினர்.

இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விபத்துகள் நிகழாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விபத்து குறித்து புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்