சொக்கநாதருடன் வந்த தருமபுரம் ஆதீனத்திற்கு சிறப்பு வரவேற்பு

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு சொக்கநாதருடன் வந்த தருமபுரம் ஆதினத்திற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-05-15 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு சொக்கநாதருடன் வந்த தருமபுரம் ஆதினத்திற்கு சிறப்பு வரவேற்பு

சட்டைநாதர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரர் உடன் அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு கடந்த 11-ந் தேதி தருமபுரம் ஆதீனம் மடத்திலிருந்து சொக்கநாதரோடு பாதயாத்திரையாக புறப்பட்டு கடந்த 12-ந் தேதி திருநன்றியூரில் உள்ள உலகநாயகி சமேத லட்சுமி புரீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து கடந்த 12-ந் தேதி மாலை மீண்டும் புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சொக்கநாதரோடு வருகை தந்தார். பின்னர் இரண்டு நாள் வைத்தீஸ்வரன் கோவிலில் தங்கி மீண்டும் நேற்று மாலை சொக்கநாதரோடு சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தார்.

பூரண கும்ப மரியாதை

அப்பொழுது சீர்காழி நகர எல்லையில் நாதஸ்வரம், செண்டை மேளம், வாண வேடிக்கை முழங்க மேல தாளங்களோடு சீர்காழி தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து வழிநெடுகிலும் பொதுமக்கள், வர்த்தகர்கள் தருமபுரம் ஆதீனத்திற்கு பூரண கும்ப மரியாதை வழங்கினர். தொடர்ந்து தென்பாதியில் ராஜ்கமல் தலைமையிலும், நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமையிலும் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து கச்சேரி ரோடு, புதிய பஸ் நிலையம், பிடாரி தெற்கு வீதி, 4 தேர்வீதிகள் உள்ளிட்ட வீதிகளில் உள்ள வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் தர்மபுரம் ஆதீனத்திற்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து வர்த்தக சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் தருமபுரம் ஆதீனத்திற்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இந்த பாதயாத்திரையில் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சாமிநாதன், முரளிதரன், பந்தல் முத்து, கோவி நடராஜன், நாராயணசாமி, சக்கரபாணி, பொறியாளர் தனராஜ், நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பாலமுருகன், நகர மன்ற உறுப்பினர்கள் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை செந்தில் செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்