சிறப்பு பட்டா முகாம் நடத்த வேண்டும்

சிவகாசியில் சிறப்பு பட்டா முகாம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-07-13 22:04 GMT

சிவகாசி, 

சிவகாசியில் சிறப்பு பட்டா முகாம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

சிறப்பு முகாம்

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி வருவாய்த்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பால் வீடற்ற ஏழை, எளிய மக்கள் பலருக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும். பல ஆண்டுகளாக அரசு நிலத்தில் பட்டா இல்லாமல் வசித்து வரும் மக்களுக்கு இந்த சிறப்பு முகாம் மூலம் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.

உடனடியாக பட்டா

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக அரசு நிலத்தில் சிறிய அளவில் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அதிகாரிகளையும், அரசு பிரதிநிதிகளையும் சந்தித்து மனு கொடுத்து வருகிறார்கள். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.

எனவே அரசு சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் 100 சிறப்பு முகாம்களில் ஒன்றை சிவகாசியில் நடத்த வேண்டும். இங்குள்ள மக்களிடம் உரிய மனுக்களை பெற்று அதனை ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.

கால்நடைகளுக்கு நோய்

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட புதுக்கோட்டை, செவலூர், சித்தமநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இங்கு கானை நோய் பரவி வருகிறது.

இதனை தடுக்க புதுக்கோட்டை கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் நடத்தி கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்