கோயம்பேட்டில் ஆயுதபூஜை பண்டிகைக்காக சிறப்பு சந்தை இன்று தொடக்கம்

சென்னை கோயம்பேட்டில் ஆயுதபூஜை பண்டிகைக்காக சிறப்பு சந்தை இன்று தொடக்கியுள்ளது.;

Update:2022-09-30 10:06 IST

போரூர்,

ஆயுத பூஜை பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேடு மார்கெட்டில் உள்ள பூ மார்கெட் வளாகத்தில் இன்று சிறப்பு சந்தை தொடங்கியுள்ளது. மதுரை, திருவண்ணாமலை, செய்யாறு, வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 100 லாரிகளில் குவிந்துள்ள அவல், பொரி, கடலை வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனைக்கு தயாராகி வருகின்றனர்.

1-ந் தேதி இரவு முதல் வாழை கன்றுகள், தோரணங்கள், பூசணிக்காய், வாழைத்தார் பழங்கள் அதிக லாரிகளில் குவியும் என்றும் அதன் பின்னரே ஆயுத பூஜை விற்பனை களை கட்டி சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 9-ந் தேதி வரை 10 நாட்களுக்கு சிறப்பு சந்தை செயல்பட உள்ளது.

இதை பயன்படுத்தி சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் ஒரே இடத்தில் அனைத்து பொருட்களையும் எளிதாக வாங்கி செல்ல முடியும்.

விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் ஆகிய முக்கிய பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை மூலம் பொருட்கள் விற்பனை செய்வது வழக்கம். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பு சந்தை நடத்த அங்காடி நிர்வாக குழு சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்துள்ளதால் ஏற்கனவே விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு சந்தை நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து தற்போது ஆயுத பூஜை பண்டிகைக்கும் சிறப்பு சந்தை நடத்த அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்