வடமதுரை அருகே 24 மணி நேரமும் பால் தரும் தெய்வீக பசு

வடமதுரை அருகே பசு ஒன்று 24 மணி நேரமும் பால் சுரந்து வருகிறது. இந்த தெய்வீக பசுவை ஏராளமான பொதுமக்கள் வணங்கி செல்கின்றனர்.

Update: 2022-11-04 20:30 GMT

வடமதுரை அருகே பசு ஒன்று 24 மணி நேரமும் பால் சுரந்து வருகிறது. இந்த தெய்வீக பசுவை ஏராளமான பொதுமக்கள் வணங்கி செல்கின்றனர்.

அதிசய பசு

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). இவரது மனைவி மயில் (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பெருமாள் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம், பக்கத்து ஊரான செங்குளத்துபட்டியில் உள்ளது. தோட்டத்தின் அருகிலேயே கொட்டகை அமைத்து பசுமாடு ஒன்றையும் வளர்த்து வருகிறார்.

பொதுவாக பசுமாடு, காளையுடன் இனம் சேர்ந்து கன்று ஈன்ற பிறகு தான் பால் சுரக்கும். ஆனால் பெருமாள் வளர்க்கும் 1½ வயதுடைய பசு, காளையுடன் இனம் சேராமல், சினை ஊசியும் போடாமல், கன்றும் ஈன்றாமல் திடீரென்று பால் சுரந்து வருகிறது. மேலும் இந்த பசு 24 மணி நேரமும் பால் சுரந்து வருகிறது. அதாவது எப்போது பால் கறந்தாலும், அந்த பசுவின் மடுவில் பால் சுரக்கிறது. இதனால் அந்த பசுவை பெருமாள் அதிசய பசுவாக பார்த்து வருகிறார்.

வணங்கும் பொதுமக்கள்

கன்று ஈன்றாமல், பால் சுரக்கும் அதிசய பசு குறித்த தகவல் காட்டுத்தீ போன்று வடமதுரை சுற்றுவட்டார கிராமங்களில் பரவியது. இதையடுத்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பெருமாளின் அதிசய பசுவை நேரில் பார்த்து வணங்கி செல்கின்றனர்.

மேலும் பசுவிடம் தங்களது குறைகளை கூறி, புல் மற்றும் தீவனங்களை கொடுத்து, காலை தொட்டு வணங்குகின்றனர். அதன் பாலையும் வாங்கி குடித்துச்செல்கின்றனர்.

இதையொட்டி பெருமாள் தினமும் தனது பசுவை குளிப்பாட்டி, மஞ்சள் பூசி அலங்கரித்து வருகிறார். மேலும் பசு கறக்கும் பாலை, அங்கு வரும் பொதுமக்களுக்கு குடிப்பதற்கு கொடுத்து வருகிறார். அந்த பாலை குடிக்கும் பொதுமக்களும் அமிர்தம் போல் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த பசுவிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த பசுவை தெய்வீக பசுவாக போற்றி வருகின்றனர்.

பிரச்சினைகள் தீர்க்கும்...

இதுகுறித்து பசுவின் உரிமையாளர் பெருமாள் கூறுகையில், இந்த பசுமாட்டை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து ஊரான செங்குளத்துபட்டியை சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் வாங்கினேன். பின்னர் அதனை தோட்டத்துக்கு அருகில் உள்ள கொட்டகையில் வளர்த்து வருகிறேன். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பசுவின் மடுவில் இருந்து பால் சுரந்தது. ஆனால் இந்த பசுமாடு, காளையுடன் இனம் சேரவில்லை. அதேபோல் சினை ஊசியும் போடவில்லை. பிறகு எப்படி என்று ஆச்சரியத்துடன் பார்த்தேன். ஆனால் அந்த பசுமாடு தொடர்ந்து இன்று வரை பால் சுரந்து வருகிறது.

இந்த பசு வந்தபிறகு எனது பல்வேறு பிரச்சினைகள் தீர்ந்துள்ளது. அதேபோல் எனது உறவுக்கார பெண் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் அவர், இந்த பசுவின் பாலை குடித்து வந்தார். தற்போது அவர் குழந்தை பாக்கியம் பெற்றுள்ளார். இந்த பசுவின் தெய்வீக தன்மையை அறிந்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் நேரில் வந்து பசுவை வணங்கி செல்கின்றனர். அதன்மூலம் அவர்கள் நன்மை அடைந்து வருகின்றனர். இது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

கோவில் அர்ச்சகர்

பசுவை பார்க்க வந்த செங்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் கூறுகையில், நான் திருமலைக்கேணி முருகன் கோவிலில் அர்ச்சகராக உள்ளேன். நந்தவனப்பட்டியில் அதிசய பசுமாடு இருப்பதாக கேள்விப்பட்டேன். இந்த மாட்டை தரிசித்து அதன் பாலை குடித்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்றும், உடலில் உள்ள அனைத்து நோய்களும் குணமடைவதாகவும் ஏராளமானோர் சொல்ல கேட்டு, இன்று (நேற்று) அந்த தெய்வீக பசுவை வணங்குவதற்காக வந்தேன். தற்போது அந்த பசுவை வணங்கிவிட்டு, அதன் பாலை குடித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்