வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் 21 மற்றும் 22-ந் தேதிகளில் நடைபெறும்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் 21 மற்றும் 22-ந் தேதிகளில் நடைபெறவுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 3,657 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் போதிய முன்னேற்றம் காணப்படாததால், பொதுமக்கள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக நாளை (சனிக்கிழமை) மற்றும் 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை படிவம் 6பி மூலம் இணைத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.