கூட்டுறவு வங்கிக்குள் புகுந்த பாம்பு

கூட்டுறவு வங்கிக்குள் புகுந்த பாம்பு

Update: 2022-08-29 20:43 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் நேற்று மாலை பாம்பு ஒன்று புகுந்தது. இதை அந்த வங்கியின் ஊழியர் ஒருவர் பார்த்து பாம்பு, பாம்பு என்று அலறினார். இதனால் வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா உத்தரவின்பேரிலும், வனச்சரகர் ரவீந்திரன் அறிவுரையின்படியும் வன ஊழியர்கள் துரைராஜ், ஸ்டீபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் அவர்கள் பாம்பு பதுங்கியிருந்த இடத்தை தேடிப்பார்த்தனர். அப்போது அங்குள்ள ஒரு அட்டைப் பெட்டிக்குள் அந்த பாம்பு பதுங்கியிருந்தது தெரிய வந்தது. உடனே வனத்துறை ஊழியர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து வெளியே கொண்டு வந்தனர். பிடிபட்ட பாம்பு சுமார் 6½ அடி நீளமுள்ள சாரைப்பாம்பு என்பது தெரிய வந்தது. அந்த பாம்பு வயலில் எலி ஒன்றைப் பிடித்து தின்று வங்கிக்குள் வந்து படுத்துக்கொண்டதாக வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர். பிடிபட்ட பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்