உள்ளிருப்பு போராட்டம் நடத்திய வருவாய்த்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை
கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய வருவாய்த்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உள்ளிருப்பு போராட்டம்
தேனி மாவட்டம், பெரியகுளம் தாசில்தார் காதர்ஷெரீப் மீது கிராம நிர்வாக அலுவலர்கள் 2 பேர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அதுகுறித்து விசாரணை குழுவினர் நடத்திய விசாரணையில் அந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பெரியகுளம் தாசில்தார் காதர்ஷெரீப் ஆண்டிப்பட்டிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தாசில்தார் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதுகுறித்து கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணியளவில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவித்தனர்.
கலெக்டர் பேச்சுவார்த்தை
பின்னர், நேற்று பிற்பகலில் கலெக்டர் அலுவலகத்தில், போராட்டம் நடத்திய வருவாய்த்துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஷஜீவனா பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு வகிக்கும் ரவிச்சந்திரன், ஆர்.டி.ஓ.க்கள் சிந்து, பால்பாண்டி ஆகியோர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப் படுவதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் மேலும் கூறும்போது, 'பெரியகுளம் தாசில்தார் காதர்ஷெரீப் பணி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவை நிறுத்தி வைத்து மீண்டும் அவர் பெரியகுளத்திலேயே பணியை தொடர்வார் என்று பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் தெரிவித்த 2 கிராம நிர்வாக அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டத்தை கைவிடுகிறோம்' என்றனர்.
நிர்வாக காரணங்கள்
இதுதொடர்பாக கலெக்டர் ஷஜீவனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'வருவாய்த்துறை அலுவலர் சங்க பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கடந்த 31-ந்தேதி தாசில்தாருக்கு வழங்கப்பட்ட பணி இடமாறுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த பணி இடமாறுதல் உத்தரவானது முற்றிலும் நிர்வாக காரணங்களின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிட மாறுதலானது எந்த ஒரு தாசில்தார் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையிலோ, புகாரின் பேரிலோ வழங்கப்பட்டது அல்ல என்பதும் சங்க பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க பிரதிநிதிகள் முதுநிலை நிர்ணயம் செய்தல், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இக்கோரிக்கைகளை விரைவில் தீர்த்துவைப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது' என்று கூறப்பட்டுள்ளது.