மாந்தோப்புகளை சூறையாடிய ஒற்றை யானை
பேரணாம்பட்டு அருகே ஒற்றை யானை மாந்தோப்புகளை சூறையாடியது.
ஒற்றை யானை
பேரணாம்பட்டு வனசரக பகுதியில் உள்ள சேராங்கல், பத்தலப்பல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூர், அரவட்லா, பாஸ்மார்பெண்டா, கொத்தூர், பொதலகுண்டா, ரங்கம் பேட்டை, குண்டலபல்லி உள்ளிட்ட காப்புக்காடுகளை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களிலும், மா, வாழை, தென்னந் தோப்புகளிலும், காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சூறையாடி வருகின்றன.
இந்தநிலையில் சேராங்கல் காப்புக்காடு -மோர்தானா காப்புக்காடு இடையே சுற்றித்திரிந்து வரும் ஒற்றையானை நேற்று அதிகாலை 3.30 மணியளவில் குண்டலப்பல்லி வனப்பகுதியையொட்டி உள்ள ஜான்வின்சென்ட் என்பவரது மாந்தோப்பில் புகுந்து 20 மாமரக் கிளை முறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதில் சுமார் 5 டன் மாங்காய்கள் சேதமடைந்தன.
மாமரங்களை முறித்தது
பின்னர் அருகில் உள்ள பாலின்ராஜ் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் புகுந்து மாமரங்களை முறித்து 1½ டன் எடையுள்ள மாங்காய்களை நாசம் செய்தது. ஒற்றை யானையின் அட்டகாசம் காலை 6.30 மணி வரை நீடித்தது. மாந்தோப்புகளை விட்டு நகராமல் பிளிறியவாறு சுற்றித் திரிந்த ஒற்றை யானையை விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் வனத்துறையினர் காலை 7 மணியளவில் பட்டாசு வெடித்து அருகிலுள்ள மோர்தானா காப்புக் காட்டுக்குள் விரட்டினர்.
தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை நிரந்தரமாக விரட்டி கிராம மக்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.