சிறுவன் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரம்; தீயணைப்பு படையினர் லாவகமாக அகற்றினர்
நெல்லை அருகே விளையாடியபோது விபரீதமாக சிறுவன் தலையில் சில்வர் பாத்திரம் மாட்டிக் கொண்டது. இதனை தீயணைப்பு படையினர் லாவகமாக அகற்றினர்.
நெல்லை அருகே கங்கைகொண்டான் அணைத்தலையூர் ஊரைச் சேர்ந்த மிக்கேல் ராஜ் என்பவருடைய மகன் சேவியர் (வயது 4). நேற்று இரவு இந்த சிறுவன் விளையாடும் போது தவறுதலாக சில்வர் பாத்திரம் ஒன்றை தலையில் மாட்டிக் கொண்டான். ஆனால் அந்த பாத்திரத்தை எடுக்க முடியவில்லை. உடனடியாக சேவியரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அவனது பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மீட்பு படை வீரர்கள் விரைந்து சென்று சிறுவனின் தலையில் மாட்டிய எவர்சில்வர் பாத்திரத்தை மீட்புக் கருவி கொண்டு லாவகமாக அகற்றினர். அதன் பிறகு சிறுவன் மற்றும் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.