தேசிய போலீஸ் அகடாமியின் இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.சேர்மராஜன் பதவியேற்பு

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகடாமியின் இயக்குனராக ஏ.சேர்மராஜன் பதவி ஏற்றுள்ளார்.

Update: 2022-07-02 03:31 GMT

சென்னை:

தேனி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே.அய்யாசாமி- ரத்தினம்மாள் தம்பதியின் மூத்த மகன் ஏ.சேர்மராஜன் என்ற ஏ.எஸ்.ராஜன். வணிகர் குடும்பத்தில் பிறந்த இவர் 1987-ம் ஆண்டு நடந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வில் வெற்றிப் பெற்று ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார்.

ஒருகிணைந்த பீகார் மாநிலம், ராஞ்சி மாவட்டத்தில் தன் பணியை தொடங்கினார். பின்னர், கொள்ளையர்கள், ரவுடிகளின் ஆதிக்கம் நிறைந்த பல மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். என்கவுண்டர் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் கொள்ளையர்கள், ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார். சட்ட ஒழுங்கை நிலைநாட்டி, குற்றச் சம்பவங்களை வெகுவாக குறைத்து, பீகார் முழுவதும் புகழடைந்தார்.

பின்னர் மத்திய உளவு பிரிவு (ஐ.பி.) அதிகாரியாக டெல்லி, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 20 ஆண்டுகளாக பணியாற்றினார். இறுதியாக ஐ.பி.யில் சிறப்பு இயக்குனராக பணியாற்றி வந்த ஏ.எஸ்.ராஜன், ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகடாமியின் இயக்குனராக பதவி ஏற்றுள்ளார். இந்த அகடாமியில் தான் புதிய ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்