தொடர் விடுமுறை - சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் சென்னை வாசிகள்.!
தொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர் செல்வதற்காக மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர்.;
சென்னை,
வருகிற திங்கள்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் சேர்த்து விடுமுறை நாளாக உள்ளது. அதுபோல விஜயதசமி தினமும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும்.
தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக குவிந்து வருகின்றனர்.
இதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்து கானப்படுகிறது. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க 200க்கும் மேற்பட்ட போலீசார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.