மதுரை-மானாமதுரை நான்கு வழிச்சாலையில் தொடர் வழிப்பறி சம்பவங்கள்-வாகன ஓட்டிகள் அச்சம்
மதுரை-மானாமதுரை நான்கு வழிச்சாலையில் தொடர்ந்து நடக்கும் வழிப்பறி சம்பவங்களால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
மானாமதுரை
மதுரை-மானாமதுரை நான்கு வழிச்சாலையில் தொடர்ந்து நடக்கும் வழிப்பறி சம்பவங்களால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
நான்கு வழிச்சாலை
மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த நான்கு வழிச்சாலையில் சென்று வருகின்றன. மேலும் தினந்தோறும் மானாமதுரையில் இருந்து ஏராளமானோர் தினசரி கூலி வேலைக்காக அருகே உள்ள திருப்புவனம் மற்றும் மதுரை சென்று வருகின்றனர்.
இது தவிர கல்லூரி மாணவ-மாணவிகளும் படிப்பதற்காக தினந்தோறும் மதுரை சென்று வீடு திரும்புகின்றனர். இதேபோல் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் செவிலியர்கள், தொழிலாளர்கள் ஆகியோரும் இரவு ஷிப்ட் முடித்து விட்டு நள்ளிரவில் வீடு திரும்புகின்றனர். இவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளை மட்டுமே பயன்படுத்தி செல்கின்றனர்.
தொடரும் வழிப்பறி சம்பவங்கள்
இதையடுத்து இவர்களை குறிவைக்கும் ஒரு வழிப்பறி கும்பல் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை வழிமறித்து அவர்கள் வைத்திருக்கும் பணம் மற்றும் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பி செல்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மானாமதுரை மற்றும் அதன் அருகே உள்ள அன்னியேந்தல், ராஜகம்பீரம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட இடங்களில் 4 பேர் கொண்ட ஒரு வழிப்பறி கும்பல் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களிடம் வழிமறித்து அவர்களிடமிருந்து செல்போன், பணம், நகை, லேப்-டாப் உள்ளிட்டவைகளை திருடி அங்கிருந்து தப்பிச் சென்றனர். இவ்வாறு அனைத்து பொருட்களையும் பறிகொடுத்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க முடியாமல் வீடு திரும்பியுள்ளனர். மேலும் இந்த வழிப்பறி திருட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அதன் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் தப்பியோடிய வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை பகுதிகளில் வழிப்பறி சம்பவங்ளில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் ஏற்கனவே கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வழிப்பறி கும்பல் மதுரை-மானாமதுரை நான்கு வழி சாலையை தேர்வு செய்து தற்போது அங்கு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே போலீசார் இரவு நேரத்தில் இந்த நான்கு வழிச்சாலை பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.