பறக்கை அருகே ஜல்லி கற்களால் தொடர் விபத்து; வீட்டுக்குள் லாரி புகுந்ததால் பரபரப்பு

பறக்கை அருகே ஜல்லி கற்களால் தொடர் விபத்து நடந்து வருகிறது. வீட்டுக்குள் புகுந்த லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-06 18:32 GMT

மேலகிருஷ்ணன்புதூர், 

பறக்கை அருகே ஜல்லி கற்களால் தொடர் விபத்து நடந்து வருகிறது. வீட்டுக்குள் புகுந்த லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டுக்குள் புகுந்த லாரி

நாகர்கோவிலில் இருந்து மணக்குடிக்கு செல்லும் சாலையில் குளத்துவிளை பகுதியில் சாலை சீரமைப்பு பணி கடந்த சில மாதமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காக ஆங்காங்கே அந்த பகுதியில் ஜல்லி கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மணக்குடியில் இருந்து பறக்கை நோக்கி நேற்று அதிகாலை லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை மயிலாடி ஆர்.சி.தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது 24) என்பவர் ஓட்டினார்.

ஜல்லிகள் மீது ஏறி இறங்கிய போது லாரி திடீரென ஆகாஷின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் லாரி கழிவுநீர் ஓடையில் சரிந்து வீட்டின் சுற்றுச்சுவர் மோதி நின்றது.

மற்றொரு சம்பவம்

இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. டிரைவர் ஆகாசுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதேபோல் நேற்றுமுன்தினம் ஒரு கார் அதே பகுதியில் ஜல்லிக்கற்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.

வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாத அளவிற்கு சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் விபத்துக்கள் நடப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

எனவே அந்த பகுதியில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு சாலையை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்