கொலை வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் தனிப் பிரிவு - ஐகோர்ட்டு மதுரை கிளை
கொலை வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் புதிதாக தனிப் பிரிவை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது.
மதுரை,
கொலை வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் புதிதாக தனிப் பிரிவை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
திருச்சி அரியமங்கலத்தை சேரந்தவர்கள் சதீஷ்குமார், சங்கர். இவர்களுக்கு கொலை வழக்கில் திருச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி 2 பேரும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு கூறும்போது,
கொலை வழக்குகளை சட்டம் - ஒழுங்கு போலீசாரே விசாரிக்கின்றனர். அதிக வேலைப்பளு காரணமாக விசாரணையை மேற்கொள்ள சட்டம் - ஒழுங்கு போலீசாருக்கு நீண்ட காலம் ஆகிறது. அதிக வேலைப்பளு காரணமாக விசாரணையை தொய்வு இல்லாமல் மேற்கொள்ள சட்டம் - ஒழுங்கு போலீசாரால் முடியவில்லை.
இதனால் தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனிப் பிரிவு தொடங்க காவல் துறைக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது. இது தொடர்பாக தமிழக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். பின்னர், விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.