குற்ற வழக்குகளுக்கு போலீசில் தனிப்பிரிவு-தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

அதிக பணிச்சுமையால் விசாரணை நழுவி குற்றவாளிகள் தப்புகின்றனர் என்றும், குற்ற வழக்குகளுக்கு தனி விசாரணை பிரிவை போலீசில் ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

Update: 2022-10-11 20:38 GMT

அதிக பணிச்சுமையால் விசாரணை நழுவி குற்றவாளிகள் தப்புகின்றனர் என்றும், குற்ற வழக்குகளுக்கு தனி விசாரணை பிரிவை போலீசில் ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

ஆயுள் தண்டனையில் இருந்து விடுவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், சங்கர் ஆகிய இருவருக்கும் கொலை வழக்கில் தலா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து அவர்கள் இருவரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை கடந்த 2017-ம் ஆண்டில் தாக்கல் செய்தனர்.

இந்த கொலை வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருந்தவர்கள், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்திற்கும், அதே சாட்சிகள் கோர்ட்டில் அளித்த சாட்சியத்திற்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன.

கொலை சம்பவத்தை நேரில் பார்த்ததாக எந்த சாட்சியும் கிடையாது. எனவே மேல்முறையீட்டு மனுதாரர்களுக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, சதீஷ்குமார், சங்கர் ஆகியோருக்கு விதித்த ஆயுள்தண்டனையை ரத்து செய்து 2019-ம் ஆண்டில் உத்தரவிட்டனர்.

ஐகோர்ட்டு அதிருப்தி

மேலும் சம்பவத்தின்போது சாட்சிகளிடம் போலீசார் பெறும் வாக்குமூலத்துக்கும், விசாரணையின்போது கோர்ட்டில் தெரிவிக்கப்படும் சாட்சியத்துக்கும் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்க, வாக்குமூலங்களை வீடியோ பதிவு செய்வதற்கான வசதிகளையும், வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்துவது பற்றி அரசு வக்கீல்கள், வக்கீல்களிடம் கோர்ட்டு தரப்பில் கருத்துகள் கேட்கப்பட்டன.

மேலும் குற்றவழக்குகளை விசாரிப்பதால் சட்டம்-ஒழுங்கு போலீசாரின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இந்த உத்தரவை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக எந்த பதிலும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த தாமதத்தால் ஐகோர்ட்டு அதிருப்தி அடைந்தது. இதுதொடர்பாக நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

போலீசில் தனிப்பிரிவு

கடுமையான குற்றங்களை போலீசார் விசாரிக்கும் விதம் குறித்து இந்த கோர்ட்டு ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து இருந்தது. குற்றச்சம்பவங்களை விசாரிக்க தனி விசாரணைப்பிரிவை உருவாக்குவது குறித்தும், சட்டம்-ஒழுங்கு போலீசாரின் விசாரணை சுமையை தவிர்க்கும் வழிகளை ஏற்படுத்தும்படியும் அரசை, நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். இந்த சுமையால், பெரும்பாலான வழக்குகளில் போலீசாரின் விசாரணை நழுவி குற்றவாளிகள் தப்பும் நிலை ஏற்படுகிறது.

இதை தவிர்க்க முதல் கட்டமாக, குற்ற வழக்குகளின் விசாரணையை மட்டுமே கையாளும் தனிப்பிரிவை உருவாக்குவது அரசின் கடமை. இதைச்செய்தால், மற்ற நடைமுறை அம்சங்களை சிறப்பு பிரிவு மூலம் திறம்பட செயல்படுத்த முடியும்.

எனவே இந்த கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்ற எடுத்த நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தமிழக போலீஸ் டி.ஜி.பி. தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்