கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்
கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியாத்தத்தில் தமிழ்நாடு கோழி வளர்ப்பு விவசாயிகள், வினியோகம் செய்வோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வேலூர், திருப்பத்தூர் மாவட்ட பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன் தலைமை தாங்கினார். சிவஞானம், தாமோதரன், மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருள் சீனிவாசன் வரவேற்றார். மாநில செயலாளர் துளசிநாராயணன் தொடக்க உரையாற்றினார்.
ஒன்றியக் குழு உறுப்பினர் அம்பலூர் செந்தில்குமார், வழக்கறிஞர் சு.சம்பத்குமார், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் நடராஜன், மகாலிங்கம், குணசேகரன், ஏகலைவன், நரசிம்மன், கோபால ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அகில இந்திய துணை செயலாளர் டி.ரவீந்திரன் நிறைவு உரையாற்றினார்.
கூட்டத்தில் கோழி வளர்ப்பு விவசாயிகள், ஏற்றுமதியாளர்களுக்கு தனி வாரியம் அமைத்திட வேண்டும். இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வங்கி கடன் வழங்க வேண்டும். கறிக்கோழி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்ப ஒரு கிலோ கோழி வளர்ப்புக்கு கூலியாக ரூ.20 வழங்க வேண்டும். கோழிகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.