வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது

வாலிபருக்கு அரிவாள் வெட்டு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-21 20:00 GMT

பொன்மலைப்பட்டி:

திருச்சி அரியமங்கலம் மலைப்பநகரை சேர்ந்தவர் விஜய் (வயது 24). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட சிலருக்கும் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்து. சம்பவத்தன்று விஜய் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ராஜ்குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் வந்து விஜயை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ராஜ்குமார் என்ற எலி ராஜ்குமார், தாமரைச்செல்வன் என்ற வினோத், இளவரசன் என்ற கன் சோட்டு ஆகிய 3 பேரை கைது செய்து திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

ஜன்னல் கண்ணாடி உடைப்பு

*ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல்(42). சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் தனது நண்பர்களுடன் வெற்றிவேலின் வீட்டுக்கு வந்தார். அங்கு வெற்றிவேலின் வீட்டு ஜன்னல் கண்ணாடியை சேதப்படுத்திய அவர், வெற்றிவேலையும், அவரது மகனையும் தகாத வார்த்தைகளால் திட்டி, வெற்றிவேலை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தனது சகோதரியிடம் பேசக்கூடாது என்று வெற்றிவேலின் மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின்பேரில் நந்தகுமார் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

*திருச்சி சுப்பிரமணியபுரம், பொன்மலைப்பட்டி சாலையில், குழந்தையை பள்ளியில் விட்டுச் சென்ற சிவப்பிரியா என்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியையும், மற்றும் கே.கே.நகர் சிம்கோ மீட்டர் சாலை பகுதியில் பள்ளி ஆசிரியை ஒருவரிடமும் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவை குறித்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் குண்டூர், அய்யனார் நகரைச் சேர்ந்த புகழேந்தி(வயது 50) மற்றும் இனாம் குளத்தூர் விநாயகர் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (44) ஆகியோர் இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

*திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(55). இவர் மணப்பாறை அருகே மறவனூரில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை அவர் தோட்டத்தின் அருகிலேயே பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*மணப்பாறை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சின்னதுரை(45). எலக்ட்ரீசியனான இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்