வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டருக்கு தீ வைப்பு

பெரம்பலூரில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டருக்கு தீ வைத்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-07-15 19:03 GMT

ஸ்கூட்டருக்கு தீ வைப்பு

பெரம்பலூர் சங்குபேட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 54). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் பரமேஸ்வரி (23) பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு இரவு 9 மணியளவில் வீடு திரும்பினார். பின்னர் பரமேஸ்வரி தனது ஸ்கூட்டரை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை 2 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் குமாரின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டருக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றனர்.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்டு குமார் மற்றும் அவரது குடும்பத்தினா் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் ஸ்கூட்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றியும், மண்ணை போட்டும் அணைத்து பார்த்தனர். ஆனாலும் ஸ்கூட்டர் எரிந்து தீக்கிரையானது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் குமார் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும், தொடர்ந்து விசாரணை நடத்தியும் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்