கால்வாய்க்குள் கவிழ்ந்த பள்ளி வேன்

திருவட்டார் அருகே தனியார் பள்ளி வாகனம் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 2 மாணவர்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-11-28 18:45 GMT

திருவட்டார்:

திருவட்டார் அருகே தனியார் பள்ளி வாகனம் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 2 மாணவர்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

தனியார் பள்ளி வேன்

திருவட்டார் அருகே சித்திரங்கோட்டில் தனியார் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று நேற்று காலையில் சாமியார்மடத்தில் இருந்து குட்டக்குழிக்கு சிற்றார் பட்டணங்கால்வாயோரம் உள்ள சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தது.

இந்த சாலையின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பள்ளி வேனில் டிரைவர், உதவியாளர் மற்றும் பிலாவிளையை சேர்ந்த 1-ம் வகுப்பு மாணவர், அவரது தங்கை (எல்.கே.ஜி.் படிக்கிறார்) என 4 பேர் இருந்தனர்.

கால்வாய்க்குள் கவிழ்ந்தது

கஞ்சிமடம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிளுக்கு வழி விடுவதற்காக டிரைவர் வேனை சாலையோரம் ஒதுக்கினார். அப்போது, திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் சுமார் 20 அடி பள்ளத்தில் இருந்த சிற்றார் பட்டணங்கால்வாய்க்குள் கவிழ்ந்தது. வேனுக்குள் இருந்த 4 பேரும் கூச்சலிட்டனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். உடனே அவர்கள் கால்வாய்க்குள் குதித்து வேனின் கண்ணாடியை உடைத்து உள்ளே மயங்கிய நிலையில் இருந்த டிரைவர் உள்பட 4 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

4 பேர் காயம்

இந்த விபத்தில் 4 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் சிகிச்சைக்காக சாமியார்மடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே கால்வாய்க்குள் கவிழ்ந்த வேன் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சாமியார்மடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்