மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற பெங்களூருவை சேர்ந்த பள்ளி மாணவர் பலி
மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற பெங்களூருவை சேர்ந்த ஹரீஷ் என்ற பள்ளி மாணவர் விபத்தில் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம்,
பெங்களூருவை சேர்ந்த 13 பள்ளி மாணவர் ஸ்ரேயாஸ் ஹரிஷ் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். காஞ்சிபுரம் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் எம்ஆர்எப் எம்எம்எஸ்சி எப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றில் பெங்களூரைச் சேர்ந்த பைக்கர் ஷ்ரேயாஸ் ஹரிஷ் பங்கேற்றார்.
பந்தயத்தில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கியதில், அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்றது. இதனால், அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
கடந்த மே மாதம் மினிஜிபி இந்தியா பட்டத்தை வென்ற ஷ்ரேயாஸ், ஸ்பெயினில் நடந்த மினிஜிபி பந்தயங்களில் பங்கேற்று, இரண்டு பந்தயங்களிலும் முறையே ஐந்தாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
திறமையான இளம் வீரரை இழந்தது சோகம். தனது அற்புதமான பந்தயத் திறமையால் புதிய அலைகளை உருவாக்கிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் உயிரிழந்தது பெரும் இழப்பு. இந்தச் சம்பவம் காரணமாக இந்த வார இறுதி நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் என்று எம்எம்எஸ்சி தலைவர் அஜித் தாமஸ் தெரிவித்தார்.