கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

திருவேங்கடம் அருகே, கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான். அவன் மீன்பிடிக்க சென்றபோது தவறி விழுந்தானா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்;

Update: 2022-11-16 18:45 GMT

திருவேங்கடம்:

திருவேங்கடம் அருகே, கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான். அவன் மீன்பிடிக்க சென்றபோது தவறி விழுந்தானா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கொத்தனார் குடும்பம்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் போலீஸ் சரகம் செல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 40). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மாரீஸ்வரி.

இந்த தம்பதிகளுக்கு கவின்குமார் (9), மதன்குமார் (8) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

இதில், கவின்குமார் அந்த ஊரில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

மாயம்

கவின்குமாருக்கு கண் நோய் (மெட்ராஸ் ஐ) ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு விடுமுறை போட்டு விட்டு வீட்டில் இருந்தான்.

நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற கவின்குமார் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் பதறியபடி மகனை தேடினர். மாயமான மகனை உறவினர்கள் வீடு, பக்கத்து கிராமம் என பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் கவின்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கிணற்றில் தேடினர்

இந்தநிலையில் கவின்குமார் மீன் பிடிக்க சென்றதாக ஒரு சிறுவன் கூறியுள்ளான். மேலும் அங்குள்ள ஒரு கிணற்றின் அருகில் சென்றதாக சிலர் கூறினராம். அதை தொடர்ந்து ஊரின் அருகிலுள்ள அந்த கிணற்றில் தேடிப்பார்த்தனர். இதுபற்றி திருவேங்கடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

திருவேங்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார்.

உடல் மீட்பு

அதன் பேரில் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் வீரர்கள் நேற்று அந்த கிணற்றுக்கு வந்து தேடினர். அப்போது கவின்குமார் உடல் கிணற்று நீரில் மூழ்கி கிடந்ததை கண்டறிந்து சுமார் 2 மணி நேரத்துக்கு பின் மீட்டனர்.

பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீன்பிடிக்க சென்றபோது தவறி விழுந்து கிணற்றில் மூழ்கி இறந்தானா? அல்லது சாவுக்கு வேறு காரணம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளி சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்