ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கொள்ளையனின் கால் துண்டானது

ஜன்னல் ஓர பயணிகளிடம் செல்போன் பறிக்க முயன்றபோது ஓடும் மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த கொள்ளையனின் கால் துண்டானது.

Update: 2022-10-06 22:10 GMT

பெரம்பூர்,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி நேற்று முன்தினம் இரவு மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி-கொருக்குப்பேட்டை இடையே மின்சார ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.அப்போது தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், திடீரென மின்சார ரெயிலில் தாவி ஏறினார். பின்னர் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருக்கும் பயணிகளிடம் செல்போனை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

கால் துண்டானது

இதற்கிடையில் ஜன்னலில் தொங்கியபடி வந்த வாலிபர், ஓடும் ரெயிலில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது 2 கால்களும் ரெயில் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது.

இதில் அவரது இடது கால் முற்றிலும் நசுங்கி துண்டானது. வலது காலும் முற்றிலும் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார், கால் துண்டான நிலையில் படுகாயத்துடன் கிடந்த வாலிபரிடம் விசாரித்தனர்.

செல்போன் கொள்ளையன்

விசாரணையில் அவர், சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த செல்போன் கொள்ளையன் நவீன் என்ற அட்டை நவீன் (வயது 21) என்பது தெரிந்தது. போலீசார் நவீனை, ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.வழக்கமாக பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி-கொருக்குப்பேட்டை இடையே மின்சார ரெயில்கள் மற்றும் விரைவு ரெயில்கள் செல்லும்போது வேகம் குறைவாக இருக்கும். இதனை பயன்படுத்தி கொள்ளையர்கள், ஓடும் ரெயிலில் தாவி குதித்து ஏறி ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும் பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபடுவது வழக்கம்.

போலீஸ் விசாரணை

கொள்யைன் நவீனும் இதுபோல் மின்சார ரெயிலில் பயணிகளிடம் செல்போன் பறிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவர் மீது ஏற்கனவே கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் 6 வழக்குகள் உள்ளன.

எனவே நவீன், வழக்கம்போல் ஓடும் ரெயிலில் ஏறி பயணிகளிடம் செல்போன் பறிக்க முயன்றபோது தவறி விழுந்து, ரெயிலுக்குள் சிக்கி கால் துண்டானதா? அல்லது நண்பர்களுடன் குடிபோதையில் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது தவறி விழுந்ததில் ரெயிலில் சிக்கி கால் துண்டானதா? என பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்