மாயமான பூங்காவை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு
திருவொற்றியூரில் மாயமான பூங்காவை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு சமூக ஆர்வலர் வைத்த பேனரால் பரபரப்பு.;
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கேசவன் பூங்கா இருந்தது. தற்போது அந்த பூங்கா முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது அந்த பகுதியில் பூங்கா இருந்ததற்கான அடையாளம் இல்லாத அளவுக்கு உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் கேசவன் பூங்கா இடத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் திருவொற்றியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான தொண்டன் சுப்பிரமணி என்பவர் சினிமா பாணியில் கேசவன் பூங்கா மாயமாகி விட்டதாகவும், அதனை கண்டுபிடித்து தரும்படியும் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தார்.
இதற்கிடையே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எல்லையம்மன் கோவில் சந்திப்பில் சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணி பரபரப்பு பேனர் ஒன்றை வைத்தார். அதில், "கேசவன் பூங்காவை காணவில்லை. அதை கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை பார்த்து சென்ற பொதுமக்கள், மாநகராட்சி குறித்து விமர்சனம் செய்ய தொடங்கினர்.
தகவல் அறிந்ததும், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி அந்த பேனரை அதிரடியாக அகற்றினர்.இதுகுறித்து தொண்டன் சுப்பிரமணி கூறும்போது, "தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி கேசவன் பூங்காவை மீட்பேன்" என்றார்.