ஓய்வுபெற்ற போக்குவரத்து அதிகாரி லாரி மோதி பலி

வெள்ளமடம் அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து அதிகாரி லாரி மோதி பலி

Update: 2023-06-12 20:12 GMT

ஆரல்வாய்மொழி, 

நாகர்கோவில் வடசேரி ஈழவத்தெருவை சேர்ந்தவர் ஜெயானந்தம் (வயது 77). இவர் போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் ஸ்டோர் பொறுப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தனது ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க நேற்று காலையில் விசுவாசபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வெள்ளமடம் அரசு பள்ளி அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி ஜெயானந்தம் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய ஜெயானந்தம் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்தார். இதனால் லாரி அவரின் தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் ஹெல்மெட் அணிந்திருந்தும், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயானந்தம் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் உயிரிழந்த ஜெயானந்தம் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரியை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுதொடப்பாக லாரி டிரைவரான ஊரல்வாய்மொழியை சேர்ந்த மாசானமுத்து மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்