10 ஆண்டுகளாக காகங்களுக்கு வடை கொடுக்கும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்
கொத்தமங்கலத்தில் 10 ஆண்டுகளாக ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் காகங்களுக்கு வடை கொடுத்து வருகிறார்.;
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 70). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் கடைவீதிக்கு காலை 7 மணியளவில் வந்ததும் 100-க்கும் மேற்பட்ட காகங்கள் அவரை சுற்றி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், முத்துச்சாமி கடந்த 10 ஆண்டுகளாக காகங்களுக்கு வடைகளை வழங்கி வருகிறார். இதற்காக அதே பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பனை (65) நியமித்து அவருக்கு நாள்தோறும் ஊதியமாக ரூ.10 வழங்குகிறார். டீக்கடையில் முத்துச்சாமி அமர்ந்ததும் அவருக்காக தயாராக காத்திருக்கும் முதியவர் முத்துக்கருப்பனிடம், டீக்கடைக்காரர் 10 வடைகளை கொடுக்கிறார். பின்னர் அவர் அந்த வடைகளை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து ரவுண்டானா அருகே அமர்ந்து காகங்களுக்கு வைக்க சில நிமிடங்களில் அந்த வடைகளை காகங்கள் எடுத்து செல்கிறது. முத்துச்சாமி வரவில்லை என்றாலும் தினமும் காகங்களுக்கு வடைகளை பிய்த்து கொடுக்கும் முத்துக்கருப்பனிடம் டீக்கடைக்காரர் வடைகளை கொடுத்து விடுவார். கொரோனா நேரத்தில் கடைகள் இல்லாததால் காகங்களுக்கும் வடை கிடைக்கவில்லை. மேலும் முத்துக்கருப்பனுக்கும் 10 ரூபாய் கிடைக்கவில்லை என்கின்றனர். காகங்களுக்கு வடை கொடுக்கும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.