பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை ஒப்படைக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கலாம்-அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு பரிந்துரை

நிதிநிறுவன மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகையை திரும்ப அளிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அல்லது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கலாம் என அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு பரிந்துரைத்துள்ளது.;

Update:2023-06-10 00:40 IST

நிதிநிறுவன மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகையை திரும்ப அளிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அல்லது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கலாம் என அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு பரிந்துரைத்துள்ளது.

நிதி நிறுவன மோசடி

குளோபல் கேபிட்டல் டிரேடிங் என்ற பெயரில் கடந்த 2010-ம் ஆண்டு மதுரை, தேனி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் நட்ராயன் உள்பட பலர், மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு நல கோர்ட்டில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன அதிபரின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன. இந்த சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும்படி முதலீட்டாளர் நல கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நிதி நிறுவனம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சொத்துக்களை விற்கும்படி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மோசடி அதிகரிப்பு

நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தது தொடர்பாக தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முடக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. அவர் இந்த தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரித்து கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் ஏன்? என்பதற்கு அரசு தரப்பில் அளித்த பதிலில், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, கனிமவள முறைகேடுகளை தடுப்பது, மாவட்ட நிர்வாக பொறுப்பு மற்றும் பேரிடர் காலங்கள் என பல்வேறு பணிகளில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளதால் தாமதம் ஏற்படுகிறது என தெரிவித்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நிதி நிறுவன மோசடி அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி

இது போன்ற நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் படிப்பறிவு இல்லாத ஏழை மக்கள்தான். நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுகளில் இதுவரை 1,249 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ரூ.827 கோடியே 67 லட்சத்து 75 ஆயிரத்து 644-க்கான சொத்து இணைக்கப்பட்டு உள்ளது. நிதி நிறுவன மோசடி சட்டத்தின்கீழ், மாவட்ட வருவாய் அலுவலர்களின் கணக்கில் கிட்டத்தட்ட ரூ.372 கோடி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.264 கோடி தொகை திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே நிதி நிறுவன மோசடிகளில் பறிமுதல் செய்யப்பட்ட தொகையையும், அந்நிறுவனங்களின் சொத்துக்களை விற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் திரும்பிக் கொடுக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லது ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை நியமிக்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, நிதி நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்