பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற முடிவு

பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற முடிவு

Update: 2022-09-16 14:24 GMT

உடுமலை

ஊராட்சி பள்ளி வளாகங்களில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றுவது என ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மு.மகாலட்சுமி முருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.ஏ.சண்முகவடிவேல், ஆணையாளர் எஸ்.மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சிகள்) மு.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு 60ஆண்டுகளுக்கு மேல் ஆனதாலும், மேற்கூரை பழுதான நிலையில் உள்ளதாலும் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அனுமதியும், கட்டிடம் கட்டுவதற்கான நிதியும் கோரி அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்புவது.

தேவனூர்புதூர், கொடிங்கியம், பூலாங்கிணர், ராகல்பாவி, கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பாலப்பம்பட்டி சமத்துவபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகங்களில் பழுதடைந்து பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள சமையல் கூடம், கழிப்பறை, சத்துணவு மையக்கட்டிடம் ஆகியவற்றை, கலெக்டரின் அனுமதி பெற்று இடித்து அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில நிதிக்குழு மானியம்

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசியதாவது:-

ஊராட்சி ஒன்றியங்கள் தனி அலுவலர்களால் நிர்வகிக்கப்பட்ட போது ரூ.7கோடிக்கு சாலைகள் போடப்பட்டுள்ளது. இந்த தொகை, தற்போது மாநில நிதிக்குழு மானியம் நிதியில் இருந்து மாவட்ட நிர்வாகத்தால் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.4½ கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஒன்றியத்திற்கு வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்படும் மாநில நிதிக்குழு மானியம் தொகை குறைகிறது. அதனால் வளர்ச்சித்திட்ட பணிகள் பாதிக்கிறது. அதனால் தனி அலுவலர் நிர்வாகத்தின் போது செய்யப்பட்ட சாலைப்பணிகளுக்கான செலவுத்தொகையை, தற்போது இந்த ஒன்றியத்திற்கு ஒதுக்கப்படும் மாநில நிதிக்குழு மானியம் நிதியில் இருந்து பிடித்தம் செய்யக்கூடாது என்றும், ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை இந்த ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளின் வளர்ச்சித்திட்ட பணிகளுக்காக திருப்பி தரவேண்டும் என்றும் மாவட்ட கலெக்டரை கேட்டுக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்