மது அருந்தும் கூடாரமாக மாறிய ரேஷன் கடை
மது அருந்தும் கூடாரமாக ரேஷன் கடை மாறிய நிலை உள்ளது.
பட்டப்பகலில் அமர்ந்து...
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. பாளையம் ஏரிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை உள்ளதால், அங்கு மது பாட்டில்கள் வாங்கி வரும் மது பிரியர்கள், இந்த ரேஷன் கடையில் பட்டப்பகலில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
சிலர் மது போதையில் தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு, அந்த வழியாக செல்பவர்களிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்களில் மது அருந்தும் கூடாரமாக ரேஷன் கடை மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியவில்லை.
கண்டும், காணாத அதிகாரிகள்
மது போதையில் சிலர் ரேஷன் கடையில் வாந்தி எடுத்து விடுகின்றனர். இதனால் மறுநாள் கடை திறக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மது பிரியர்களில் சிலர் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளில் அமர்ந்தும் மது அருந்துகின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடைக்கு செல்ல அச்சமடைந்து சாலையில் நின்று காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர். பெண் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டும், காணாதது போல் சென்று விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.