தீவனூர்லட்சுமி நாராயண பெருமாள் மீது சூரிய ஒளி விழுந்த அபூர்வ நிகழ்வு :பக்தர்கள் சாமி தரிசனம்
தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் மீது சூரிய ஒளி விழுந்த அபூர்வ நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில் ஆதி நாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை வழக்கம் போல் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில்
பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது காலை 6 மணிக்கு லட்சுமிநாராயண பெருமாள் சிலையின் பாதத்தில் சூரிய ஒளி விழுந்தது. பின்னர் அந்த ஒளி படிப்படியாக மேல் நோக்கி சென்று, சிலை முழுவதும் விழுந்தது.
அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், பெருமாள் மீது சூரிய ஒளி விழுந்த அற்புத நிகழ்வை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். இந்த அரிய காட்சியை 20 நிமிடங்கள் பக்தர்கள் கண்டு ரசித்தனர். இதனை தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இது குறித்து கோவில் பரம்பரை அறங்காவலர் நாமக்காரர் முனுசாமி கவுண்டர் கூறுகையில், புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் பெருமாள் சிலை மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்ச்சியை காணலாம். ஆண்டுதோறும் இந்த அற்புத நிகழ்வை பக்தர்கள் கண்டு களித்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்றார்.