'ஒக்கி' புயலின்போது மீட்கப்பட்ட அரியவகை கழுகு, விமானம் மூலம் ராஜஸ்தான் கொண்டு செல்லப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒக்கி’ புயலின்போது மீட்கப்பட்ட அரியவகை கழுகு சென்னையில் இருந்து விமானம் மூலம் ராஜஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது.;
சென்னை,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 'ஒக்கி' புயல் கடும் சேதங்களை ஏற்படுத்தியது. அப்போது நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் அரியவகை சினேரியஸ் கழுகு அந்த மாவட்ட வனத்துறையினரால் மீட்கப்பட்டது. பின்னர் இந்த கழுகிற்கு 'ஒக்கி' என்று பெயர் சூட்டி, உதயகிரி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டது. இந்த வகை கழுகு காட்டில் கூட்டமாக வாழும் தன்மை உடையது.
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கெரு என்ற இடத்தில் இந்த வகை கழுகினங்கள் அதிகம் வசிக்கின்றன. எனவே ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உயிரியல் பூங்காவில் விடுவதற்கு தமிழக அரசின் வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அம்மாநில வன உயிரின பாதுகாவலரிடம் உரிய அனுமதி பெற்றனர்.
இதைத்தொடர்ந்து அந்த கழுகை பாதுகாப்பான முறையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் எடுத்து செல்வதற்கான ஏற்பாடுகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
விமானத்தில் பறந்தது
அதன்படி கன்னியாகுமரியில் இருந்து சினேரியஸ் கழுகு வாகனம் மூலம் சாலைமார்க்கமாக வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவுக்கு கடந்த 30-ந்தேதி எடுத்து வரப்பட்டது. அங்கு 2 நாட்கள் பராமரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று பகலில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் காற்றோட்ட வசதியுடன் கூடிய கூண்டில் அடைக்கப்பட்டு இந்த கழுகு எடுத்து செல்லப்பட்டது. நேற்று மதியம் ஜோத்பூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்திய வன உயிரின நிறுவனத்தின் மூலம் இந்த கழுகிற்கு 'டிரான்மீட்டர்' பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த கழுகு ஜோத்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து இயற்கை சூழல் நிறைந்த கெரு பகுதியில் விடப்படும்.