ஆசிரியர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஆசிரியர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேசினார்.

Update: 2023-02-04 18:45 GMT

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஆசிரியர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேசினார்.

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட (சி.பி.எஸ்.) ஒழிப்பு இயக்கம் சார்பில் பொள்ளாச்சி வங்கி ஊழியர் சங்க கட்டிட அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சி.பி.எஸ். முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். இதற்கான ஆயத்த கூட்டங்களை தமிழ்நாடு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் நடத்தி வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தா விட்டால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அலுவலர்களை திரட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழகத்தில் சாதகமான அம்சங்கள் இருந்தும், அதை கண்டு கொள்ளாமல் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்கிறார்கள்.

இது வாக்குறுதியை நம்பி வாக்களித்த ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

ராஜஸ்தான் உள்பட 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்து உள்ளது. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே தலையீட்டு வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் அல்லது அதற்கு முன்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்