பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியை தொழில் மண்டலமாக ஆக்கிவிடக்கூடாது

பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியை தொழில் மண்டலமாக ஆக்கிவிடக்கூடாது

Update: 2023-04-01 19:49 GMT

பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியை தொழில் மண்டலமாக ஆக்கி விடக்கூடாது என்று காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறினார்.

காவிரி உரிமை மீட்புக்குழு

தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணிமொழியன், நிர்வாகிகள் துரை.ரமேஷ், கலைச்செல்வன், ரெத்தினவேலன், ராமலிங்கம், தனபால், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொழில் மண்டலமாக ஆக்கி விடக்கூடாது

திருச்சியில் இருந்து நாகை வரை ரூ.1000 கோடியில் வேளாண் தொழில் பெருந்தடம் அமைக்கப்போவதாக தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்து உள்ளது. இங்கு பெருந்தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலை மண்டலமாக அமைக்கப்படக்கூடாது.

உணவுத்துறை சார்ந்த சிறு, குறு தொழில்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். எனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை தொழில் மண்டலமாக ஆக்கி விடக்கூடாது.

கரும்பு விவசாயிகள்

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும் வழங்க வேண்டும். இயற்கை வேளாண்மையை ஒப்புக்கு அறிவிக்காமல் உயிர்ப்புடன் செயல்படுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளை ஏமாற்றிய சர்க்கரை ஆலை நிர்வாகிகள், மது ஆலை நிர்வாகிகள், வங்கி நிர்வாகிகளை கைது செய்து விவசாயிகளுக்கு கரும்புத்தொகையை அரசு பெற்றுத்தர வேண்டும்.

பயிர் காப்பீட்டு திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. அறுவடை பரிசோதனை முடிவுகளையும், இழப்பீட்டு தொகையையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் அறிவித்தபடி பயிர்க்காப்பீட்டு திட்டத்திலும் இணையதள பதிவேற்றம் செய்து வெளிப்படைத்தன்மையை தமிழக அரசு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தீமை பயக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் காவிரி டெல்டா பகுதியில் மாநாடு நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தமிழ் தேசிய பேரியக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வைகறை, விடுதலைச்சுடர், தென்னவன், பழ.ராஜேந்திரன், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்