தமிழகத்தில் 5 ரெயில் நிலையங்களை புனரமைக்கும் திட்டம்
தமிழகத்தில் 5 ரெயில் நிலையங்கள் புனரமைக்கும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த தெற்கு ரெயில்வே முனைப்பு காட்டி வருகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வேயில் உள்ள 9 ரெயில் நிலையங்களை அதன் பாரம்பரியம் மாறாமல் புனரமைக்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்காக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். அந்தவகையில் தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி உள்பட 5 ரெயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளன.
அதேபோல் கேரளாவில் 3 ரெயில் நிலையங்களும், புதுச்சேரியில் ஒரு ரெயில் நிலையமும் புனரமைக்கப்பட உள்ளன. இந்த பணி மண்டல ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த 9 ரெயில் நிலையங்களில் சென்னை எழும்பூர் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையங்களை தவிர்த்து மற்ற அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் புனரமைப்புக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, தற்போது அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
எழும்பூர், கன்னியாகுமரி
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை பொறுத்தவரை டெண்டர் திறக்கப்பட்டு, ஒப்பந்தம் வழங்குவதற்கான இறுதிக்கட்டத்தில் உள்ளது. கன்னியாகுமரி நிலையத்துக்கு டெண்டர் கோரப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் 26-ந் தேதி திறக்கப்பட உள்ளது. விரைவில் இந்த ரெயில் நிலையங்களிலும் பணிகளை தொடங்க ரெயில்வே நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
தமிழகத்தில் கும்பகோணம், திருநெல்வேலி, கேரளாவில் செங்கனூர், திருச்சூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையையும் தெற்கு ரெயில்வே மேற்கொண்டுள்ளது.
திட்ட அறிக்கை
ரெயில் நில மேம்பாட்டு ஆணையமானது (ஆர்.எல்.டி.ஏ.) 8 ரெயில் நிலையங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில் தமிழகத்தில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல், தாம்பரம், ஆவடி, கோவை ஆகிய 4 ரெயில் நிலையங்களும், கேரளாவில் திருவனந்தபுரம் சென்டிரல், வர்க்கலா, கோழிக்கோடு ரெயில் நிலையங்களும், கர்நாடகாவில் மங்களூர் சென்டிரல் ரெயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தெற்கு ரெயில்வேயில் மேலும் 38 ரெயில் நிலையங்கள் புனரமைப்புக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த தகவல்களை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.