பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது

பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

Update: 2022-09-02 18:07 GMT

தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு "காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை" சிறப்பாக செயல்படுத்துவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான வருகிற 15-ந் தேதியன்று தமிழக முதல்-அமைச்சரால் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரம்பலூர் கிழக்கு, பெரம்பலூர் மேற்கு, முத்து நகர் ஆகிய 3 தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதற்கு தேவையான நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை கட்டும் பணிகள், சுமார் ரூ.25 லட்சத்தில் பெரம்பலூர் முத்து நகர் பள்ளியில் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமை வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமை அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை வரகு பொங்கலுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சாமை கிச்சடி மற்றும் ரவா கேசரி (இனிப்பு) ஆகியவை சமைத்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 3 பள்ளிகளிலும் சேர்த்து 112 மாணவ-மாணவிகள் பயன் பெற உள்ளனர். மாணவ-மாணவிகளுக்கு புதிய எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வழங்கப்படவுள்ளது என்றார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா முத்து நகர் பள்ளியில் நடைபெற்று வரும் சமையலறை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாசன், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்