சாலையோர பள்ளத்தில் இறங்கிய தனியார் பள்ளி பஸ்
ராமநத்தம் அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் பள்ளி பஸ் இறங்கியது.;
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள வேப்பூரில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று திட்டக்குடி மற்றும் ராமநத்தம் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு மேலாதனூர்-கழுதூர் சாலை வழியாக பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பஸ்சில் இருந்தனர். வழியில் சாலையில் உள்ள தரைப்பாலம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.
இதனால் பஸ்சுக்குள் இருந்த மாணவ, மாணவிகள் கூச்சல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அருகே உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து பஸ்சுக்குள் இருந்த மாணவ, மாணவிகளை அவசர அவசரமாக கீழே இறக்கி அருகில் உள்ள மரத்தடியில் அமர வைத்தனர். பின்னர் பஸ் விபத்துக்குள்ளானது குறித்து பள்ளிக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்து மாணவ, மாணவிகளின் பெற்றோர் விரைந்து வந்தனர். இந்த விபத்தில் மாணவ, மாணவிகள் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவரின் அஜாக்கிரதை மற்றும் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று பொது மக்கள் புகார் தெரிவித்தனர். பழைய பஸ்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து சரியான பாராமரிப்பு இல்லாமல் ஆபத்தான பாதைகளில் அனுபவம் இல்லாத டிரைவர்களை கொண்டு இயக்குவதே இது போன்ற விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பெரிய அளவிலான விபத்துகள் நிகழ்வதற்கு முன்னதாக இப்பகுதியில் செயல்படும் அனைத்து பள்ளி வாகனங்களையும் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.