தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்து

கடலூர் முதுநகர் அருகே தனியாா் பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Update: 2023-06-21 18:45 GMT

முதுநகர்

தனியார் பஸ்

கடலூரில் இருந்து நேற்று காலை 9 மணி அளவில் சிதம்பரம் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. புவனகிரி தாலுகா, சாக்காங்குடியை சேர்ந்த கோதண்டபாணி மகன் உதயகுமார்(வயது 44) என்பவர் பஸ்சை ஓட்டினார். பஸ் கடலூர் முதுநகர் அடுத்த பூண்டியாங்குப்பம் பகுதியில் வந்தபோது சாலையோரம் இருந்த ஈர மணலில் சிக்கியது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி சாலை விரிவாக்க பணிக்காக போடப்பட்டிருந்த மணலில் மோதி நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் எழுப்பினர்.

பயணிகள் உயிர்தப்பினர்

விபத்து நடந்த இடத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதனால் அருகில் இருந்த பள்ளம் மூடப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிகிறது. பஸ்சில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் இன்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினா். இவர்கள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

கடந்த 19-ந் தேதி நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்த 90 பேர் கடலூர் மற்றும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பஸ் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்