ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச் சென்ற கைதி சிக்கினார்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச் சென்ற கைதி சிக்கினார். சிறையில் இருந்து தப்பிச்சென்ற ஆயுள் தண்டனை கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Update: 2022-07-28 19:25 GMT

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச் சென்ற கைதி சிக்கினார். சிறையில் இருந்து தப்பிச்சென்ற ஆயுள் தண்டனை கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கைதி சிக்கினார்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள கூடலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மகன் ஜீவா (வயது 43). இவர் வாசுதேநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையம் பெறப்பட்டு இருந்து வந்தார். கடந்த 22-ந் தேதி பிணையத்தை மீறியதற்கு, ஜீவா சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி ஜீவா, மருத்துவ பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இருந்து அவர் திடீரென தப்பிச் சென்றார்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூர் மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் ஜீவாவை தேடினர். இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள்தண்டனை கைதி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் மதகனேரி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் (46). இவர் ஒரு கொலை வழக்கில் பாவூர்சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெல்லை கோர்ட்டில் 2018-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நன்னடத்தை கைதியான இவர், பாளையங்கோட்டை ஜெயில் வளாகத்தில் சிறைத்துறை மூலம் நடத்தப்படும் டீக்கடையில் டீ மாஸ்டராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் அங்கு நிறுத்தி இருந்த போலீஸ் ஏட்டு மாரியப்பனின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு டேவிட்டின் சொந்த ஊர், உறவினர்கள் இருக்கும் இடம், மனைவியின் சொந்த ஊர் போன்ற இடங்களில் முகாமிட்டு அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்