சமுதாய கூடத்தில் செயல்படும் தொடக்கப்பள்ளி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் சமுதாய கூடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.;

Update: 2023-07-27 20:00 GMT

சமுதாய கூடத்தில் செயல்படும் பள்ளி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கரிசல்பட்டி, மலையாண்டிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு ஓடுகளால் ஆன கட்டிடம் மட்டுமே உள்ளது.

இந்த கட்டிடம் மிகவும் பழமையானதால் மேற்கூரை ஓடுகளும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் அனைவரையும் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். விசேஷ நாட்களில் அந்த சமுதாய கூடத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அப்போது மாணவர்களுக்கு இடமில்லாத நிலையில் பள்ளி முன்பு உள்ள மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

கூடுதல் கட்டிடம்

இதனால் அதிகமான மாணவர்கள் படிக்கும் கரிசல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும். மேலும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவர்களுக்கு சமுதாயகூடம், திறந்தவெளியில் அமர வைத்து பாடம் கற்பிக்கப்படுகிறது.

வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால் பள்ளி ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பாதுகாப்பாக வைக்க முடியாமல் ஆசிரியர்களும் தவித்து வருகின்றனர். எனவே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்